இளமதியனின் தாத்தா Print
Written by ஐரேனிபுரம் பால்ராசய்யா   
Thursday, 04 October 2012 08:26


பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிய இளமதியன் ஊரிலிருந்து வந்திருந்த  தனது தாத்தாவைப் பார்த்ததும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போனான்.
``தாத்தா எப்ப வந்தீங்க!’’ கேட்டுக்கொண்டே அவர் மடியில் போய் அமர்ந்துகொண்டான்.
``மத்தியானம் தான் வந்தேன், நல்லா படிக்கிறியா ராசா…!’’
``ம்…தாத்தா  போன வாட்டி மாதிரி எனக்கு கத சொல்லிக்குடுங்க.!’’
‘’ உன் அப்பாவோட கதையே பெரிய கத, இப்போ நீயும் உன் அப்பா அம்மாவும் வசதியா இருக்குற மாதிரி நானும் உன் அப்பாவும் இல்ல, அந்த காலத்துல கரண்ட் கிடையாது, அரிக்கேன் விளக்குல தான் உன் அப்பா படிச்சான், போட்டுக்க ஒழுங்கா டிரஸ் கிடையாது, சாப்பிடுறதுக்கே கஷ்டம், அந்த கஷ்டத்துல உன் அப்பா பத்தாம் வகுப்பிலயும் பிளஸ்டூவிலயும் தோத்துட்டு அப்பறம் பாஸ் பண்ணிட்டான்!’’
``அப்பா, எதுக்கு தேவையில்லாம பழசயெல்லாம் அவன்கிட்ட சொல்றீங்க, நான் தோத்த விஷயம் ரொம்ப முக்கியமா? !’’ தனது தந்தை மீது கோபப்பட்டான் இளமதியனின் தந்தை.
``இல்லடா, இண்ணைக்கு படிக்குற புள்ளயிங்களுக்கு வசதி வாய்ப்பு இருக்கிறதுனால கஷ்டம்ன்னா என்னாண்ணு தெரியல, தோல்விய கூட தாங்கிக்க தெரியல, அத சொல்லித்தரணும், கஷ்டத்த சகிச்சுகிட்டும் தோல்விய தாங்கிக்கவும் பழக கத்துகிட்டாங்கன்னா எதிர்காலத்துல உன்னமாதிரி தன்னம்பிக்கையோட வருவாங்க,
அவர் சொல்வதில் உண்மை இருப்பதை உணர்ந்து மெளனமாக வெளியேறினான் இளமதியனின் தந்தை.

 

-  நன்றி குமுதம்

Last Updated on Thursday, 04 October 2012 08:30