மன்னிச்சிடுங்க Print
Written by ஐரேனிபுரம் பால்ராசய்யா   
Monday, 16 July 2012 16:41

ஐந்தாம் வகுப்பில் படிக்கும் எனது மகள் மதிவதனியோடு சாமி கும்பிட்டு வரலாமென்று தீர்மானித்து இருவரும் ஹோண்டா சிட்டியில் புறப்பட்டோம். நான்கு கிலோ மீட்டர் தள்ளியிருந்தது வழக்கமாக நாங்கள் சாமி கும்பிடும் அந்த குலதெய்வக்கோவில்.

சின்னவேடம்பட்டியை தாண்டி செல்கையில் அங்கிருந்த முருகன் கோவிலில் பறையொலி சத்தம் காதைப் பிளக்க, சிறப்பு பூஜை நடந்து கொண்டிருந்தது. பெண்கள் வரிசையாக நின்று சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.

“ அம்மா எதுக்கு அவ்வளவு தூரத்துல இருக்குற கோவிலுக்க்கு சாமி கும்பிடப்போகணும், வழியில இருக்கிற இந்த கோவில்லயே சாமி கும்பிட்டுட்டு போலாமே!” மதிவதனி கேட்டபோது எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தேன். என் மகள் விடவில்லை ,மீண்டும் கேட்கவே நான் மென்று விழுங்கியபடி அந்த உண்மையைச் சொன்னேன்.

“ அது தாழ்ந்த சாதிக்காரங்க கும்புடுற கோவில், நாம அங்கயெல்லாம் போகக்கூடாது!” என்றேன்.

” அப்போ அந்த கோவில்ல இருக்குற முருகன் சாமியும் தாழ்ந்த சாதி கடவுளா?” மதிவதனி வெகுளியாய் கேட்டபோது எனக்கு சுருக்கென்றிருந்தது.

மனுஷங்கதான் உயர்ந்தவன், தாழ்ந்தவன்னு பிரிஞ்சு கிடக்கிறாங்க, அவங்க தனித்தனியே சாமி கும்பிடுறதால தெய்வங்கள் மேல தவறான எண்ணம் அந்த பிஞ்சு மனதில் பதிந்துவிடக்கூடாதென்று வண்டியை திருப்பி வழியிலிருந்த அந்த முருகன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வீடு திரும்பினோம் எங்கள் குலதெய்வத்தை மறந்தபடி..

Last Updated on Monday, 16 July 2012 16:43