Home Short Stories குழந்தை
குழந்தை PDF Print Email
Written by   
ஞாயிற்றுக்கிழமை, 09 டிசம்பர் 2012 07:35
There are no translations available.

விடிகாலை மூன்றுமணி. எங்கும் நிசப்தம் நிலவியிருந்தது, கட்டிலுக்கடியில் ரயில் வண்டியை விட அதிவேகமாக பாய்ந்து ஓடிய எலியை துரத்திய பூனையின் அசாத்திய பாய்ச்சல் திகிலை கி
ளப்பியது
அந்த அசாத்திய பாய்ச்சலில் இருந்தும் எலி தப்பித்துக்கொண்டதில் பூனையின் ஏமாற்றம் ஒரு குரலாய் பதிவானதில் எழுந்த சத்தத்தில் தெய்வானை பாட்டிக்கு விழிப்பு வந்தது.

தெய்வானை பெருமூச்செறிந்தாள். மின்சாரம் இருந்தும் எரியாமல் அணைந்து கிடந்த மின் விளக்குகளில் பார்வை நிலை குத்தியது.
இந்த நேரத்தில் விளக்கைப் போட்டு அது மகன் பெருமாளுக்கு தெரிந்தால் கரண்ட் என்ன சும்மா கிடைக்குதா என்று காட்டு கத்தலாக கத்துவான், பேசாமல் விட்டத்தை அண்ணார்ந்து பார்த்துட்டு கிடக்கவேண்டியதுதான். தெய்வானை ஒரு முடிவுக்கு வந்தாள்.

தெய்வானைக்கு வயது எண்பத்தி ஐந்து இருக்கும், படுத்த படுக்கை என்று சொல்லிவிடமுடியாது, எழுந்து அமர, வெளியில் உலவ, பாத்றூம் போக வீட்டு வேலைக்காரியின் துணை தேவை.
அதற்காகவே ஒரு ஆயாவையும் வேலைக்கு வைத்தாகிவிட்டது, இருந்தும் அவளது முகச்சுழிப்பு சில நேரங்களில் வலிக்கும், இருந்தாலும் பழகிக்கொண்டாள்.

தெய்வானை கண் மூடியும் தூக்கம் வந்துசேரவில்லை. ஒருவழியாக விடிந்து ஒன்பது மணி வாக்கில் தனது மகன், மருமகள், பேரக்குழந்தைகள் எல்லோரும் வெளியே போய்விட்டார்கள், இனி வேலைக்காரிதான் ஆறுதல்.அவளை பகைக்காமல் இருக்க கடவுளிடம் வேண்டினாள் தெய்வானை

நண்பகல் இரண்டு மணிக்கு மின்சாரம் போயிருந்தது,

``கரண்ட் போயிருக்காது, மெயின் சுவிட்ச்தான் ஆஃப் ஆகியிருக்கும் போய்ப்பாரு! வேலைக்காரியை துரத்தினாள் தெய்வானை.

``சொன்னா கேளுங்க, கரண்ட்தான் போச்சு!’’ சலித்தபடிச் சொன்னாள் வேலைக்காரி.

தெய்வானைக்கு அவள் பேச்சில் நம்பிக்கை வரவில்லை.

``நீ போய் பார்த்துட்டு வா!’’ மறுபடியும் சொன்னாள் தெய்வானை. அதற்குள் அவளது மகன் பெருமாளும் அவரது பேரனும் வந்துவிட்டார்கள்.

``பாருங்க சார், கரண்ட் போச்சுன்னு சொன்னா நம்பாம மெயின் ஆஃப் ஆகியிருக்கும் போய் பாருங்கன்னு படுத்தறாங்க!’’ வேலைக்காரி முதல் தகவலைச் பெருமாளிடம் பத்த வைத்தாள்.

``வயசான காலத்துல ஏன் இப்படி படுத்தறே..செத்து தொலைஞ்சாலாவது பரவாயில்ல, உயிரோட கிடந்து பிராணன வாங்குது, இப்ப பேசாம கிடக்கிறியா இல்லையா?!’’ பெருமாள் போட்ட சத்தத்தில் தெய்வானை அடங்கிப்போனாள். தெய்வானைக்கு விழியோரம் கண்ணீர் திரண்டு உருண்டது.

``வயசாயிட்டு இல்லியா அதான் எல்லாருக்கும் பாரமா கிடந்து மத்தவா பிராணன வாங்கறேன்!’’ தெய்வானைக்கு குரல் உயர்த்தி தனது மகனிடம் சொல்ல வேண்டும் போல் இருந்தது ஆனால் வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள் விழுந்துகிடந்ததில் வெளியேற முடியாமல் தோற்றுப்போயின.

இரவு எட்டு மணிக்கு மறுபடியும் கரண்ட் கட் ஆனது.

``தாத்தா, கரண்ட் கட் ஆகியிருக்காது, மெயின் சுவிட்ச் தான் ஆஃப்பாகியிருக்கும் வாப்பா போய் பார்த்துட்டு வந்துடலாம்!’’ பெருமாளின் மூத்த மகனின் மூன்று வயது மகன் வினேஷ் கேட்டான்.

``மெயின்சுவிட்ச் ஆஃப் ஆகல கண்ணு, கரண்ட் தான் போயிடிச்சி, வா காட்டறேன்!’’ தனது பேரனை தூக்கிக்கொண்டு மெயின் சுவிட்ச் இருக்கும் பக்கம் வந்தான் பெருமாள்.

``பாத்தியா, மெயின்சுவிட்ச் ஆன்லயே இருக்கு, கரண்ட்தான் கட் ஆகியிருக்கு!’’

``தாத்தா, நான் கரண்ட் போகலயின்னு சொன்னதுக்கு எவ்வளவு அன்பா என்ன கூட்டிகிட்டு வந்து காட்டுனீங்க, அதுமாதிரி தானே கொள்ளுபாட்டியும் கேட்டாங்க, அவங்க கேட்டதுக்கு மட்டும் ஏன் தாத்தா அவங்கள் திட்டுனீங்க… பெரியவாளும் குழந்தையும் ஒண்ணுன்னு சொல்றது சும்மாவா…?’’

சுருக்கென்று வலித்தது பெருமாளுக்கு.

 

LAST_UPDATED2