Home Literature மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை (நாடகம்)
மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை (நாடகம்) PDF Print E-mail
Written by ஐரேனிபுரம் பால்ராசய்யா   
Sunday, 09 December 2012 06:52

தேவசகாயம்பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாறை குமரிமாவட்டத்தில் மட்டும் 200 க்கும் மேலான மேடைகளில் நடித்திருக்கிறோம். வேதசாட்சியாக இருந்த அவர் மறைசாட்சியாக மாறிய இத்தருணத்தில் அவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் ஒரு பகுதி உங்கள் பார்வைக்கு

காட்சி-15
இடம்: அரண்மனை

அ.வகிப்போர்:மன்னர், தளபதி, பூசாரி, தேவசகாயம், சேவகன்

அமைப்பு: (மன்னர் அமர்ந்திருக்க தேவசகாயம்

விலங்கிட்டு சேவகன் அழைத்து வருகிறான்)

மன்னர்: நீலகண்டா, நிமிர்ந்து பார், ஏன் தயங்குகிறாய்,

தேவ: தயக்கமில்லை மன்னா, தாங்கள் அழைத்தீர்கள் வந்தேன். கேட்க வேண்டியதை கேளுங்கள், கூறுகிறேன்.

மன்னர்: என்ன அவ்வளவு தூரத்திற்கு வந்துவிட்டாயா? நீலகண்டா, கண்ட மதத்தை கொண்டது குற்றமல்லவா? மன்னன் மக்களை அவதூறாக பேசியது குற்றமல்லவா?

தேவ: குற்றமென்று கோமகன் கூறுகிறீர்கள் இஷ்டப்படி நடப்பது குற்றமென்றால் குடிமக்களின் இஷ்டத்தை தடுப்பது குற்றமல்லவா?

தளபதி: கண்டரே, மன்னரை மறைமுகமாக பேசியது போதாதென்று நேராகவும் பேச துணிந்து விட்டாயா? உனக்கு வெட்கமில்லை.

தேவ: வெட்கப்படுவதற்கு இதில் ஒன்றும் இல்லை, பெருமைப்படவேண்டியது எவ்வளவோ இருக்கிறது, சிறிது சிறிதாக தோன்றி மறைந்து வந்த பழங்காலக் கலைகளுக்கு புத்துயிர் அளித்த பெருமை மிக்கது என் கிறிஸ்தவ மறை. அனாகரிகத்தில் வளர்ந்திருந்த ஆயிரமாயிரம் காட்டுமிராண்டிகளைத் திருத்தி பெருமை பெற்றது எங்கள் மறை. இதுபோல வேறு எந்த மறையாவது அல்லது அரசாங்கமாவது செய்திருக்கிறதா? இல்லை செய்யத்தான் முடியுமா?

மன்னர்: முடியாதென்றால் உன்னை இங்கு அழைத்து வந்திருக்க வேண்டாம், முடியாதென்று இறந்தவன் தானே உன் கிறிஸ்து.

தேவ: கிறிஸ்து, கருணையின் சிகரம், இரக்கத்தின் இருப்பிடம், அன்பின் பிறப்பிடம், அவர் அனைவரையும் மீட்க விரும்புகிறார், தன்னையே வெறுத்த அன்னாசையும் கைப்பாசையும் பரிசேயரையும்கூட பாழ்படுத்த விரும்பவில்லை.

பூசாரி: போதும் உன் புத்திமதி. பொல்லாதவற்றை கூறும் நின் நாவில் இல்லாத கதை அளக்க வேண்டாம்.

மன்னர்: நிலையற்ற வாழ்வை எண்ணும் நீலகண்டா..மனதை மாற்றி மன்னன் மதத்தை அண்டிவிடு, அர்த்தமற்ற அன்னிய மதம் உனக்கு வேண்டாம், நம் மதத்தை வெறுத்துரைக்கும் அவர்களின் மமதையை மடக்கிவிடுவேன்.

தேவ; மன்னவா…கிறிஸ்தவர்கள் ஒன்றும் மமதையில் பிற மதத்தை வெறுத்து ஒதுக்குவதில்லை, நட்புடன் நண்பர்களாக்கும் உயர்ந்த நோக்கத்தையும் பரந்த உள்ளத்தையும் கொண்டவர்கள் மன்னா, கொண்டவர்கள்.

மன்னர்: அரச விசுவாசம் உனக்கிருந்தால் நீ செய்த தவறைக்கண்டு திருந்தி என்னிடம் அண்டியிடு

தேவ: மன்னவா, கிறிஸ்துவுக்காக கிறிஸ்தவர்கள் பட்ட வேதனையைக்கேட்டால் உன் உள்ளம் துடிக்கும், நெஞ்சம் குமுறும், நான் கொலை செய்யவில்லை, கொள்ளையடிக்கவில்லை, நாட்டிற்கு விரோதமாய் கலகம் செய்யவில்லை, கிறிஸ்துவை பின்பற்றியதே நான் செய்த குற்றம், இதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டுமா?

மன்னர்: கண்டா, மன்னிப்பு கேட்கிறாயா? அல்லது துன்பங்களை ஏற்றுக்கொள்கிறாயா?

தேவ: மன்னவா, துன்பங்களைக்காட்டி திருத்திவிடலாமென்ரு எண்ணுகிறீர்கள், துன்பத்தில் வளர்ந்து மடிந்த என் ஏசுவின் வரலாறைக்கேட்டால் காது நாணும், மனம் கூசும், படிக்க கண் கலங்கும், அவர் வேதனைப்பட்ட இடங்களில் கிடந்த கல்லிற்கும் மண்ணுக்கும் கண் இருந்தால் கண்ணீர் விட்டு அழுதிருக்கும், தூணுக்கும் கூரைக்கும் வாயிருந்தால் கதறி புலம்பியிருக்கும், ஆனால் இரக்கமற்ற மக்கள் கூட்டம் பல்லிளித்து வேடிக்கை பார்த்தது, கை தட்டி ஆர்ப்பரித்தது.

மன்னர்: அர்த்தமற்ற சான்றுகள் தேவையில்லை, ஆனால் உனக்கு வரும் துன்பங்கள் இவற்றைப் போன்றதன்று, எவராலும் கணக்கிட முடியாது.

தேவ: மன்னவா, கொடிய மிருகங்களின் கோரைப்பற்களிலே, கூரிய நகங்களிலே, நான் தூக்கி எறியப்படலாம், ஆனால் அப்பொதும் ஏசுவின் நாமம் என் நாவில் எழும், தெருத்தூண்களில் கட்டி வைத்து தீ மூட்டலாம், அப்போதும் விண்நோக்கி புன்முறுவல் பூப்பேன், கல்லும் முள்ளும் நிறைந்த கரடு முரடான வீதிகளில் இழுத்துச்செல்லுங்கள், அப்போதும் இயேசுவின் நாமம் பாடுவேன், கொதிக்கும் எண்ணையில் என்னை இடுங்கள், முகம் மலர்வேன், இன்னும் எந்த வகையான வதையானாலும் மன்னா வாட்டம் காண மாட்டேன்.

மன்னர்: வாட்டம் காண்கிறாயா இல்லையா என்று பார்ப்போம், உண்ண உணவும் குடிக்க தண்ணீரும் இன்றி சிறையிலே அடையுங்கள், ஆனந்த வாழ்வைப்பற்றி சிந்திக்கட்டும், சிந்தித்து முடிவெடுக்கட்டும், காவல் கடுமையாக இருக்கட்டும், ம் கொண்டு செல்லுங்கள் இவனை சிறைக்கூடத்திற்கு…
(சேவகன் இழுத்துச்செல்கிறான்)
திரை

இந்த நாடகத்தை உங்க ஊர் கோவில் திருவிழாவில போடணுமா சொல்லுங்க போட்டுருவோம் தொடர்புக்கு 9791820195

 

Last Updated on Sunday, 09 December 2012 07:19