Home Short Stories பொய்
பொய் PDF Print Email
Written by   
வியாழக்கிழமை, 04 அக்டோபர் 2012 07:45
There are no translations available.

மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தை அடைவது பெரும்பாடாக இருந்தது. காதைக் கிழிக்கும் வாகன இரைச்சலில் வேகமாய் செல்ல வழியின்றி வாகனங்கள் சாலைகளில் முடங்கி கிடந்தன.
நீண்டு கிடந்த டிராபிக்ஜாமைப் பார்த்து பெருமூச்செறிந்தான் அனில். தனது இரு சக்கர வாகனத்தை ஓரமாய் நிறுத்திவிட்டு அவனது மனைவி தர்சனாவை அழைத்துக்கொண்டு சாலையில் நடந்தான்.
எதிரில் இருபது வருடங்களுக்கு முன்னால் தன்னோடு கல்லூரியில் படித்த  ஆக்னஸ்சை நேருக்கு நேர் சந்தித்தான். கல்லூரியை விட்டு பிரிந்த பிறகு அவளை சந்திப்பது இதுவே முதல் முறை.
``எப்படி இருக்கிற அனில், பார்த்து எவ்வளவு வருஷமாச்சு, இப்போ எங்கே வேல பார்க்கற!’’ முகத்தில் புன்னகை வழிய  படபடவென கேட்டாள் ஆக்னஸ்.
``சென்னையுல சொந்தமா பிசினஸ் பண்றேன், இவ என் மனைவி தர்ஷனா..!’’.
`` உங்களுக்கு எத்தன குழந்தைங்க?’’ கேட்டாள் தர்ஷனா.
``எனக்கு ஒரே பொண்ணு, இப்போ ஆறாவது படிக்குறா, உங்களுக்கு…?
``எனக்கு ஒரு  பையன், ஒரு பொண்ணு. பையன் ஆறாவது படிக்குறான், பொண்ணு நாலாவது படிக்குறா!’’ அனில் தர்ஷனாவை பதில் சொல்ல விடாமல் முந்திக்கொண்டு பதில் சொன்னான்.
``மறுபடியும் சந்திக்கலாம், நான் கிளம்பறேன்!’’ ஆக்னஸ் புன்னகைத்துவிட்டு புறப்பட்டாள்.
``என்னங்க, நம்ம பையன் பிளஸ் டூ படிக்கிறான், பொண்ணு எட்டாவது படிக்கிறா…நீங்க அவங்ககிட்ட ஆறாவதும் நாலாவதும் படிக்குறதா எதுக்கு பொய் சொன்னீங்க?’’ தனது சந்தேகத்தை மெல்ல கேட்டாள் தர்ஷனா.

``ஆக்னஸ்  ரொம்ப பாவப்பட்ட பொண்ணு, குடும்பசூழ்நிலயாலயும், வரதட்சணை பிரச்சனையாலயும் அவளுக்கு தாமதமாத்தான் திருமணம் நடந்ததா கேள்விப்பட்டேன், எனக்கு படிச்சு முடிச்சதும் உடனே வேலை, உடனடியா கல்யாணம், அடுத்தடுத்த வருஷமே குழந்தைகள், அவகிட்ட என் மகன் பிளஸ் டூ படிக்குறான்னும் பொண்ணு எட்டாவது படிக்கிறான்னு சொன்னா ஒருவேள அவ ஃபீல் பண்ண வாய்ப்பு இருக்கு, , எனக்கும் காலாகாலத்துல கல்யாணம் ஆகியிருந்தா என் மகளும் பிளஸ் டூ படிச்சிருப்பாளேன்னு அவ ஃபீல் பண்ணக்கூடாதுன்னு தான் அப்படியொரு பொய் சொன்னேன்!’
சொல்லி முடித்த அனிலை ஆச்சரியமாகப் பார்த்தாள் அவனது மனைவி தர்ஷனா..

 

-   நன்றி தினத்தந்தி  ஞாயிறுமலர்

LAST_UPDATED2