Home Short Stories தேடல்கள்
தேடல்கள் PDF Print E-mail
Written by ஐரேனிபுரம் பால்ராசய்யா   
Wednesday, 03 October 2012 16:39

 

காற்றை எதிர்கொண்டதில் அது உடைந்து போன சத்தம் காதுக்குள் பலமாய் கேட்டது. ஸ்கூட்டியின் வேகம் கூடகூட காற்று வழி மறிக்காமல் விலகிப்போனது,

செல்வராணி கோயம்பேடு பஸ்நிலையம் அடைந்தபோது இரவு மணி எட்டு நாற்பது ஆகியிருந்தது. ஜன நெருக்கடிகளுக்கிடையில் மாநகர பேருந்துகள் வருவதும் போவதுமாக இருந்தது.

ஸ்கூட்டியை பார்க் செய்துவிட்டு கழிவறையின் அருகில் ஒளி விழாத இரவின் அந்தகாரத்தில் பழைய சேலை கட்டிக்கொண்டும் தலை நிறைய மல்லிகைப்பூ வைத்துக்கொண்டும் உதட்டோரம் சாயம் பூசி தன்னை கடந்து செல்லும் ஆடவர்களை விழி உயர்த்தி பார்த்தபடி நின்றாள் றோசம்மா. அவள் அருகில் வந்து நின்றாள் செல்வராணி.

``வாம்மா…தொழிலுக்கு புதுசா…?”” கேட்டாள் றோசம்மா.

’’இந்த தொழில்ல உனக்கு எவ்வளவு வருமானம் வருது…?’’

``நாங்க பழசு, ஐந்நூறு ரூபா கேட்டா அதுக்கே பேரம் பேசி முந்நூறு ருபாயுல மடியும், நீ பார்க்க லட்சணமா இருக்கே, தொழிலுக்கும் புதுசு, உனக்கு ஐயாயிரம் வரைக்கும் கிடைக்கும்!’’

``உன் மனசாட்சிய தொட்டு சொல்லு, நீ இந்த தொழிலுக்கு விரும்பி வந்தியா, இல்ல வயிற்றுப்பொழைப்புக்கு செய்யறியா..?

``என்னம்மா சொல்ற, விரும்பி யாராவது இந்த தொழிலுக்கு வருவாங்களா? வயித்துப்பொழப்புக்குத்தான் செய்யறேன்!’’ எந்த கூச்சமும் இன்றி அவள் சொன்னது செல்வராணிக்கு ஆறுதலாக இருந்தது.

``தினமும் உனக்கு வருமானம் வந்தா இந்த தொழில நீ விட்டுடுவியா? தடாலடியாகக் கேட்டாள் செல்வராணி. றோசம்மாவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தடுமாறி நகம் கடித்தாள்.

``விட்டுடுறம்மா!’’ ஒரு முடிவுக்கு வந்தவளாய் சொன்னாள்.

``அப்படியின்னா என் கூட வா!’’ சொல்லிவிட்டு விறுவிறுவென நடக்க ஆரம்பித்தாள் செல்வராணி. றோசம்மாவும் அவளுக்கு பின்னால் நடந்தாள்.

``ஏய்…ஐந்நூறு தர்றேன், வர்றியா?’’ எதிரில் வந்த முப்பது வயதுக்காரன் எந்த கூச்சமும் இன்றி கேட்டான்.

``சீ…போ!’’ அவனை முறைத்தபடி செல்வராணிக்கு பின்னால் நடந்தாள்.

``வண்டியுல ஏறும்மா, நான் கோடம்பாக்கம் போறேன், உனக்கொண்ணும் ஆட்சேபனை இல்லையே!’’

``ச்சே.. அப்படியெல்லாம் ஓண்ணுமில்ல…!’’ சொல்லிவிட்டு ஸ்கூட்டியில் ஏறினாள் றோசம்மா, அவளை அழைப்பவர்கள் எல்லாம் ஆட்டோவிலோ, மாருதி கார்களிலோ நாலைந்து ஆண்களூக்கு மத்தியில் அமர வைத்து அழைத்துச்செல்வார்கள். ஒரு பெண்ணோடு ஸ்கூட்டியில் போவது இது தான் முதல் முறை.

ஸ்கூட்டி கோடம்பாக்கம் ரயில்நிலையத்தின் பின்னால் வந்து நின்றது.காம்பவுண்ட் கேட்டை திறந்து வண்டியை நிறுத்தி பூட்டி விட்டு உள்ளே நுழைந்தாள் செல்வராணி. றோசம்மாவும் அவளுக்கு பின்னால் தயங்கியபடியே நடந்தாள்.

ஹாலில் பதினைந்துக்கும் மேற்பட்ட பெண்கள் பார்சல்கள் பேக் செய்ய உதவும் ரோப்புகளின் வளைவுகளை நிமிர்த்திக்கொண்டிருந்தார்கள்,

``இது ஒரு கைத்தொழில், முன்ன காலத்துல வீடுகள்ல புழங்கறதுக்கு பனை ஓலையால பெட்டி செய்து வாங்கி புழங்குவாங்க, இப்போ பனைமரத்துல இருந்து ஓலை கிடைக்கிறதில்ல, அதுவுமில்லாம பனையோலையில செஞ்ச பெட்டி சீக்கிரத்துல கிழிஞ்சுபோயிடும், இந்த பிளாஸ்டிக் ரோப் அப்படி இல்ல, நீண்ட காலம் உழைக்கக் கூடியது,

 

இத பயன்படுத்தி பெட்டி செஞ்சு நல்ல பெயிண்டிங் பண்ணி வித்தோமுன்னா தினமும் ஐந்நூறு ரூபாய்க்கு மேல சம்பாதிக்கலாம், உங்களுக்கு இந்த தொழில சொல்லித்தந்தா கத்துக்குவீங்களா?’’ ஆதரவாய் கேட்ட செல்வராணியின் கைகளைப்பிடித்து கண்களில் ஒற்றிக்கொண்டாள் றோசம்மா.

``இங்க இருக்கிற அத்தன பேரும் இதுக்கு முன்னால உன்ன மாதிரி தொழில் செஞ்சவங்கதான், உனக்கு விருப்பமிருந்தா இங்கேயே தங்கிக்கலாம், இல்ல வீட்டுக்கு போயிட்டு தினமும் காலையில ஒன்பது மணிக்கு வந்துட்டு சாயங்காலம் அஞ்சு மணிக்கு போயிடலாம்!’’

``நான் தினமும் வீட்டுக்கு போயிட்டு வந்திடுறேன், இண்ணைக்கு மட்டும் இங்கேயே படுத்துக்கறேன்!’’

``சரி, உன் விருப்பம்!’’ செல்வராணி தனது அறைக்கு நடந்தாள்.

றோசம்மாவுக்கு அன்று தூக்கம் வரவில்லை.அங்கிருந்த பெண்கள் அசந்து தூங்குவதை வேடிக்கை பார்த்தபடி கிடந்தாள். செல்வராணி மட்டும் தன்னை இங்கு அழைத்து வந்திருக்காவிட்டால் யாரோ ஒரு காமுகன் தரும் முந்நூறு ருயாய் பணத்திற்க்காக அவனோடு சென்று முந்தானையை விரிக்கவேண்டும்.

வருபவன் சாதுவாக இருந்தால் பரவாயில்லை. மூர்க்கனோ கொடூரனோ இருந்தால் கடித்து குதறியிருப்பான். அந்த கவலை இனி நமக்கில்லை. தனக்கும் ஒரு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதுபோல் தோன்ற அந்த நினைப்பில் தூங்கிப்போனாள்.

மறுநாள் காலை ஒன்பது மணிக்கு பிளாஸ்டிக் பெட்டி எப்படி முடைவது, கூடை எப்படி முடைவது போன்ற தொழில்களை சொல்லித்தந்தாள் செல்வராணி.

ஆரம்பத்தில் றோசம்மாவின் விரல்களில் வலி எடுத்தது. போகப்போக சரியாகிடும் என்று ஆர்வமுடன் கற்க தொடங்கினாள். மதியம் ஒரு மணிக்கு சாப்பிட்ட பின்பு அனைவரும் அரை மணி நேரம் ஓய்வு எடுத்தார்கள்.

``உனக்கு எப்பிடிம்மா இந்த யோசனை தோணிச்சு, நீயும் இந்த தொழிலுக்கு வந்து அப்பறமா மாறீட்டியா..?

``இந்த தொழில் என் அம்மா எனக்கு சொல்லித்தந்தது, சொத்தவிளையில் எங்க அம்மா பனை மரத்துல பாய், பெட்டி முடைவாங்க, தினவும் பொன்னுங்கறவர் அடிக்கடி ஒலை கொண்டு வந்து குடுத்து பாய், பெட்டி முடைஞ்சு வாங்கிகிட்டு போவார்,’’

``அவர் அடிக்கடி வந்துபோனதுல அம்மாவுக்கும் அவருக்கும் பழக்கமாகி அப்பறம் ரெண்டு பேரும் மனசார விரும்ப ஆரம்பிச்சாங்க, அவர் வேற சாதியிங்கறதுனால நாம ஒண்ணு சேர முடியாதுன்னு இந்த ஊர விட்டே ஓடிப்போலாமுன்னு அம்மாவ கூப்பிட்டிருக்கிறாரு’’

``அவர் பேச்சுக்கு கட்டுப்பட்டு அம்மாவும் போயிருக்கிறாங்க, ஒரு மாசம் ஊரெல்லாம் சுத்திகிட்டு காசு தீர்ந்தது மாதிரி அவரோட ஆசையும் தீர்ந்து போச்சு, அம்மா வயித்துல அவரோட கருவா நான் வளர்றேன், இது அம்மாவுக்கு தெரியவே இல்ல, ஊருக்கு போயிடலாம், கொஞ்ச நாள் உன்ன ரகசியமா வந்து பார்த்துக்கறேன், அப்பறமா கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னாராம்’’

செல்வராணிக்கு மேற்கொண்டு சொல்ல முடியாமல் வாய் அடைத்தது. சற்று நேரம் தன்னை ஆசுவாசப்படுத்தி விட்டு மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள்.

``அம்மாவுக்கு மாதவிடாய் வரத்து நின்னு போனது மாதிரி அவர் வரத்தும் நின்னுப்போச்சாம், அப்பறம் அவர் வரவே இல்லையாம், வயித்துல மூணு மாச குழந்தையா நான் வளர்றத தடுக்க முடியாம போச்சு, ஒன்பதாவது மாசத்துல அம்மா என்ன பெற்றெடுத்து அனாதையாகி நின்னா…’’

``என்ன வளர்க்கிறதுக்காக ராத்திரியெல்லாம் முந்தானை விலக்கியிருக்கிறா, எனக்கு அஞ்சு வயசு ஆகிறப்போ எங்க வீட்டுக்கு வந்துட்டு போற ஆண்கள் யாருன்னு கேட்பேன், அம்மா கூனி குறுகி போயிடுவாங்க, கண்ணீரத்தான் பதிலா சொல்வாங்க, அப்பறம் நான் தூங்கினதுக்கப்பறம் தான் அம்மா கதவையே திறப்பாங்க..’’

எனக்கு எட்டு வயது தாண்டுனப்போ ஆண்களோட பார்வை லேசா என் மேலயும் விழ ஆரம்பிச்சுது, வயசுக்கு வராமலேயே நான் தொழிலுக்கு வந்திடுவேனோன்னு எல்லோர் மனசுலயும் ஆசை விளைஞ்சு கிடந்தது.

நான் பள்ளிக்கூடம் விட்டு வரும்போதெல்லாம் ஆண்களோட வேறு விதமான பார்வை என் மேல விழும், எனக்கு கஷ்டமா இருக்கும், செத்துப்போயிடுலாமோன்னு கூட தோணும்,

அப்பா, சித்தப்பா, மாமா, தாத்தா வயசுக்காரங்க என் கூட வர்ற பொண்ணுங்ககிட்ட பாசமா பேசுவாங்க, என்கிட்ட பேசுறப்போ மட்டும் வேற மாதிரியா பேசுவாங்க,

எனக்கு பனிரெண்டு வயசானப்போ அம்மா செய்யும் தொழில் பற்றி ஓரளவு புரிஞ்சிக்க முடிஞ்சுது, அம்மாவை கீழ்த்தரமா பார்க்கிறவங்க என்னையும் கீழ்த்தரமா பார்க்கிறாங்கன்னு அம்மாவுக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்,

ஒரு வருஷமோ அல்லது ரெண்டு வருஷமோ அதற்குள் நானும் பெரியவள் ஆகிவிடுவேன், அம்மாவைத் தேடும் ஆண்களுக்கு அம்மா செல்லாக்காசாகி பிறகு என்மீது தான் மோகம் வரும்,

எனக்கு எப்பிடி அந்த துணிச்சல் வந்ததோ தெரியல, அம்மாவ அழைச்சிட்டு சென்னைக்கு வந்திட்டேன். ரயில் நிலையத்துல வர்றவங்க போறவங்ககிட்டயெல்லாம் அம்மாவுக்கு வீட்டு வேலை வாங்கி தர முடியுமான்னு கேட்டேன், ஒருத்தர் மனசிரங்கி வாம்மான்னு கூப்பிட்டுட்டு போனார்.

அவரோட வீட்டுல அம்மாவ வீட்டு வேல செய்ய வெச்சுட்டு என்ன படிக்க வெச்சார், இண்ணைக்கு நான் பி.எஸ்.சி படிச்சி முடிச்சி சுயமா ஒரு தொழிலையும் நடத்திகிட்டு வர்றேன்,

தனது மனதிலிருந்த பாரத்தை இறக்கி வைத்தபோது ஆசுவாசமாக இருந்தது செல்வராணிக்கு. அவளது அம்மாவைப் பார்க்க றோசம்மாவின் கண்கள் ஹால் முழுக்க சுழன்றது.

``அம்மாவத்தானே தேடறீங்க, அவங்க இறந்து ரெண்டு வருஷமாகுது, அம்மா சாகிறப்போ சொன்னாங்க, யாரும் இந்த தொழிலுக்கு விரும்பி வர்றதில்லை, வயித்த கழுவுறதுக்குத்தான் இப்படியொரு கீழ்த்தரமான காரியத்த செய்யறாங்க, அவங்களுக்கு மட்டும் ஒரு தொழில் இருந்திருந்தா இந்த தொழிலுக்கு வந்திருக்கமாட்டாங்கன்னு, அம்மா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. அதனால தான் இந்த தொழில் செய்யறவங்கள தேடி கண்டுபிடிச்சு இங்க கூட்டி கிட்டு வந்து எனக்கு தெரிஞ்ச சுயதொழில கத்து குடுக்கிறேன்,    .

செல்வராணியை நினைக்க நினைக்க றோசம்மாவிற்கு பெருமையாக இருந்தது. அன்றிரவு எட்டு மணிக்கு தி.நகர் பஸ் நிலையம் அருகே ஸ்கூட்டியை பார்க் செய்துவிட்டு அந்த தொழில் செய்யும் பெண்களை தேடலானாள். அந்த மாதிரி பெண்களை தேடுவதே செல்வராணிக்கு தினமும் தேடல்களானது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Last Updated on Wednesday, 03 October 2012 16:40