Home Short Stories சொல்லவே இல்ல
சொல்லவே இல்ல PDF Print E-mail
Written by ஐரேனிபுரம் பால்ராசய்யா   
Monday, 16 July 2012 16:34

ராஜேந்திரனும் அவன் தாயாரும் தரகர் சொன்ன வீட்டுக்கு பெண் பார்க்கச் சென்ற போது, இருவரையும் வரவேற்று ஹாலில் அமர வைத்து காபி பரிமாறினார்கள்.

“ நீங்க என்ன படிச்சிருக்கீங்க, என்ன வேலை பார்க்கறீங்க?” ஹாலில் அமர்ந்திருந்த பெண்களில் ஒருத்தியான மைதிலி மெல்லக் கேட்டாள்.

“ பி.காம் முடிச்சிருக்கேன், ஒரு தனியார் கம்பனியுல அக்கவுண்டெண்டா வேல பார்க்கறேன்!” தான் பார்க்க வந்த மணப்பெண்ணின் தோழியாக இருக்கக்கூடும் என நினைத்து பவ்யமாய் பதிலளித்தான் ராஜேந்திரன்.

“ உங்க உதடு கறுத்திருக்கு, நீங்க சிகரெட் பிடிப்பீங்களா?” மறுபடியும் கேட்டாள் மைதிலி.

“ கல்லூரியில படிக்குறப்போ புடிச்சிருக்கேன் இப்போ விட்டுட்டேன்!” என்றான் ராஜேந்திரன். அரைமணி நேரத்துக்கு மேலாக மைதிலி கேள்விக்கு மேல் கேள்வி கேட்க அதற்கெல்லாம் சளைக்காமல் பதிலளித்தான் ராஜேந்திரன்.

“ சரி பேசினது போதும் பொண்ண வரச்சொல்லுங்க!” அவனது தாயார் கடுப்பாகி கேட்டாள்.

“ நாந்தாங்க பொண்ணு, எத்தன நாளைக்குத்தான் காபி தட்டோட, குனிஞ்ச தல நிமிராம வந்து காபி பரிமாறிக்கிட்டு மாப்பிள்ளைய அரையும் குறையுமா பார்த்துட்டு போறது, ஒரு சேஞ்சுக்கு இப்பிடி பண்ணீட்டேன், மாப்பிள்ளைய எனக்கு புடிச்சிருக்கு, உங்களுக்கு என்ன புடிச்சிருக்கா? மைதிலி நேரடியாக கேட்டபோது ‘ம்’ என்று தடுமாறியபடி பதிலளித்தான் ராஜேந்திரன்

Last Updated on Monday, 16 July 2012 16:36