Home
எழுத்தாளர் அறிமுகம்-6 PDF Print Email
Written by   
ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூன் 2012 17:18
There are no translations available.

குமரி ஆதவன்

 

என் விலாசத்தை என் வீதியில் தேடுகிறேன் என்றான் கஜல் என்ற உருதுமொழிக்கவிஞன். குமரிமாவட்ட படைப்பாளிகள் பலரும் தனக்கென்று தனி முகவரி படைத்தவர்கள். தோப்பில் முகமது மீரான், நீல பத்மநாபன், பொன்னீலன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், என்று பட்டியல் நீளும். அந்த வரிசையில் தனக்கென்று தனி முகவரி மட்டுமல்ல தனி முத்திரையும் பதித்தவர் குமரி ஆதவன்.

இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் ஆசானாக ஆசிரியராக பணி செய்து வந்தாலும் எழுத்தார்வம் மீது இவருக்கிருக்கும் பன்முக ஆர்வம் பலரது விழிகளை விரியச்செய்யும். இவர் பல விருதுகளுக்கு மட்டும் சொந்தக்காரர் அல்ல, பல விடாமுயற்சிகளுக்கும் சொந்தக்காரர்.

இவரது எழுத்துக்கள் ஏராளமான கனவுகளை சுமந்துகொண்டு வாழும் மனித இதயங்களை எல்லாம் உழத்தொடங்கி சீர்படுத்தும் ஆற்றல் கொண்டவை. யதார்த்த அணுகுமுறையில் தொடங்கும்இவரது சிந்தனைகள் பலரையும் ஈர்பதுண்டு,

உயிரோட்டம் மிகுந்த எழுத்தார்வம் இவரை பனிரெண்டு நூல்களை எழுத் தூண்டியிருக்கிறது கவிதை நூலில் தொடங்கி ஆய்வு நூல்கள் வரை அத்தனையும் இலக்கிய தரம் சார்ந்த நூல்களாக இருப்பது மற்றொரு தனிச்சிறப்பு.

இவர் எழுதிய ரத்தம் சிந்தும் தேசம், எரிதழல் கொண்டு வா, அருமை மகளே ஆகிய கவிதை நூல்கள் பல ரணங்களின் வலிகளை வரிகளாக்கி கவிதை நூலாக்கியிருக்கிறார். நிராகரிக்கப்பட்ட மக்களின் நியாயத்தை நியாயப்படுத்துவதற்கென்றே எழுதப்பட்ட கவிதை நூல்கள் என்றும் சொல்லலாம். இவரது சிகரம் தொடு எனும் கவிதை ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் அனைவருக்கும் பாடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் எழுதிய வரலாற்று ஆய்வு நூல்களான குருதியில் பூத்த மலர், அறிக பாசிசம், குலைகுலையா முந்திரிக்கா, ஒரு தமிழ்சிற்பியின் பயணம், தெற்கில் விழுந்த விதை போன்ற நூல்கள் காலத்தால் அழியாத கருத்துப்பெட்டகங்கள். தேவசகாயம் பிள்ளை வரலாற்றில் நிகழ்ந்த நிகழ்வுகளை அவர் பட்ட அவலங்களை மிக அழகாக தெற்கில் விழுந்த விதை எனும் நூலில் எழுதியிருக்கிறார்.

இது தவிர ஆதவன் கேள்வி பதில்கள், என் கேள்விக்கென்ன பதில், பேரறிஞர்களுடன் என்ற நேர்காணல் நூலும் வெளியிட்டுள்ளார். மொத்தம் பதினொன்று நூல்கள் வெளியிட்டிருக்கும் குமரி ஆதவன் குழந்தைகளின் எதிரிகள் (ஆய்வுநூல்), இல்லறப்பூங்கா(கட்டுரைகள்), எத்தனைப்பிறவிகள்(புனித ஜார்ஜியார் வரலாறு) பிரான்சின் தேவதை(புனித பெர்னதத் வரலாறு) இடியும் சுவர்கள் (சிறுகதை தொகுப்பு) மண்சோறு (சிறுகதை தொகுப்பு) என  ஆறு நூல்கள் வெளியிட தயார் நிலையில் வைத்துள்ளார். கூடிய விரைவில் அவை நூல்களாக மலர்ந்து தமிழ் நெஞ்சங்களில் கைகளில் தவழும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இவரது நூல்கள் பல இளைய தலைமுறைகளின் ஆய்வு நூல்களாக எடுத்தாளப்பட்டு பலரும் பட்டங்கள் வாங்கிட இவர்து நூல்கள் உதவியிருக்கின்றன. திரு பாலஸ் நாகர்கோவில் அவர்கள் குமரிமாவட்ட எழுத்தாளர் குமரி ஆதவன் எனும் பெயரிலும், தே.ஜான்சி நாகர்கோவில் அவர்கள் குமரி ஆதவன் கவிதைகளில் புதிய மானுடச் சிந்தனைகள் எனும் பெயரிலும், சுனிதா நாகர்கோவில் அவர்கள் எரிதழல் கொண்டு வா கவிதைத் தொகுப்பு காட்டும் விடுதலைச்சிந்தனைகள் எனும் பெயரிலும் ஆய்வுகள் செய்துள்ளார்கள்.

திரு ஜெய்.ஜீவா குமரி ஆதவன் கவிதைகள் ஓர் ஆய்வு எனும் பெயரிலும், மே.சேம் டானியல் புதுக்கவிதைகளில் சமுதாய நோக்கு எனும் பெயரிலும், க. செலின் குமரி ஆதவனின் படைப்புகளில் விடுதலைச் சிந்தனைகள் எனும் பெயரிலும், பெனினா குமரி மாவட்ட புதுக் கவிஞர்களும் கவிதைகளும் எனும் பெயரிலும், மா. கார்த்திகேயன் புதிய தலைமுறைக் கவிஞர்களின் புதுக்கவிதைகள் எனும் ஆய்வுகள் மேற்கொண்டு பட்டங்கள் பெற்றிருக்கிறார்கள்.

இளைய தலைமுறையின் மிகுந்த பற்றும் பாசமும் கொண்ட குமரிஆதவன் அவர்களுக்கென்று எழுதிய கட்டுரைகள் பலரின் கவன ஈர்ப்பை பெற்றிருக்கிறது. செண்பகமலர் மாத இதழில் எழுதிய சிகரம் நோக்கி சிறகடிப்போம் என்ற தொடர் கட்டுரை தன்னம்பிக்கையின் மறு வடிவமாகவே அமைந்து பலரின் வாழ்கைப் பாதையை மாற்றியமைத்தது. இதைப்போல உதயதாரகை மாத இதழில் உடைந்து சிதறும் குடும்ப உறவுகள் எனும் தொடர் கட்டுரை பல குடும்ப உறவுகளின் விரிசல்களை விலக்கி நல்லுறவை ஏற்படுத்தும் மிக அற்புதமான கட்டுரைகளாக மலர்ந்திருந்தன.

இளம் வயதிலேயே பல்வேறு இதழ்களில் எழுதத்தொடங்கிய குமரிஆதவன் தனது வீரியமிக்க விதைகளை கவிதைகளாக கட்டுரைகளாக, சிறுகதைகளக இருபத்திஏழுக்கும் மேற்ப்பட்ட தினசரி, வார, மாத இதழ்களில் எழுதி அவை வெளிவந்து பலரது பாராட்டு மழையில் நனைந்திருக்கிறார்.

இவரது படைப்புகள் தினமலர், தமிழ்முரசு, தீக்கதிர், கதிரவன், புதிய காற்று, வலம்புரிமங்கை, அமுதம், தென் ஒலி, யுகச்சிற்பி, யுகசக்தி, உதயதாரகை,,பூபாளம்,தேசியவலிமை,முதற்சங்கு, ஏழையின் குமுறல், குமரிக்கடல், துடிப்பு, வானவில், புனித குறள் அரசு, கரவொலி, இளைய நிலா, எதிர்நீச்சல், தடயங்கள், ஆனந்தம், வேளம், விடியலைநோக்கி, வெள்ளி நிலா போன்ற இதழ்களிலும் 25 க்கும் மேற்பட்ட ஆண்டு மலர்கள், சிறப்பு மலர்களில் இவரது படைப்புகள் வெளிவந்து அமோக ஆதரவைப் பெற்றிருக்கிறது.

இவரது படைப்புகளைப்போலவே இவரது படைப்புத்த்திறனை பாராட்டி கெளரவித்தவர்களின் எண்ணிக்கையும் பெற்ற விருதுகளும் அதிகம். 2005-ம் ஆண்டு இலக்கிய சாதனையாளர் விருது, 2006-ம் ஆண்டு நல்நூல் விருது, 2007-ம் ஆண்டு சேவைச்செம்மல் விருது மற்றும் மனித நேய முரசு விருது, 2008-ம் ஆண்டு இளம் இலக்கிய சாதனையாளர் விருது, மற்றும் நல்லாசிரியர் விருது, 2009-ம் ஆண்டு கலைச்சுடர் விருது என பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர் இவர்.

பத்திரிகை துறையில் மிகுந்த ஈடுபாடும் ஆர்வமும் கொண்ட இவர் தென் ஒலி, யுகசக்தி, உதய தாரகை போன்ற மாத இதழ்களின் துணை ஆசிரியராகவும், செண்பக மலர் மாத இதழின் ஆலோசகராகவும் இருந்து இதழ் வளர பெரும் பங்காற்றி வந்துள்ளார்.

ஒரு எழுத்தாளராக மட்டுமன்றி சிறந்த நடிகராக, சிறந்த பேச்சாளராக, பாடலாசிரியராக, ஆவண குறும்படத்தின் இயக்குநராக, சமூக மாற்றத்தின் முன்னோடியாக, புதிய தலைமுறைகளுக்கு பயிற்சி அளிக்கும் ஆசானாக, பல்வேறு இளைஞர் அமைப்புகளின் வழிகாட்டியாக, பல்வேறு பத்திரிகைகளின் ஆலோசகராக, பல மாணவ மாணவியர்களின் ஆசிரியராக பல்முகம் கொண்ட சிறந்த சாதனையாளர் இந்த குமரி ஆதவன்.

சன் டி.வி தொலைக்காட்சி அரட்டை அரங்கம் நிகழ்சியில் இருமுறை கலந்து கொண்டு தனது அனல் தெறிக்கும் பேச்சால் அரங்கத்தையே அதிர வைத்தவர் 500-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் கலந்துகொண்டு தனது வீரிய கருத்துக்களைச் சொல்லி கேட்பவரை அசர வைப்பவர். தற்பொழுது திண்டுக்கல் லியோனி தலைமையிலான பட்டிமன்றங்களில் பேசிவரும் இவர் சன் டிவி, டி.டி.என், நெய்தல், சி.என்.ஆர் போன்ற தொலைக்காட்சிகளில் 25 க்கும் மேற்பட்ட பட்டிமன்ற நிகழ்சிகளில் பேசி பலரது புருவங்களை உயர வைத்தவர்.

இவரது படைப்புத்திறனைச் சொல்ல முதற்சங்கு இதழில் ஒரு பக்கம் போதாது முழு பக்கம் எழுதினாலும் இவரது இதரச் சிறப்புகள் எல்லாவற்றையும் எழுதிட முடியாது. வருங்காலம் இவரை இன்னும் பல விருதுகளுக்கு சொந்தக்காரராக்கி இலக்கிய உலகம் இவரை உயர்ந்த இடத்தில் வைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

முகவரி: 10-113, செபாஸ்டின் இல்லம், குமாரபுரம் அஞ்சல், குமரிமாவட்டம்-629 189 தொலைபேசி: 04651-289391, 9442303783  .

LAST_UPDATED2