Home Literature எழுத்தாளர் அறிமுகம்-3
எழுத்தாளர் அறிமுகம்-3 PDF Print E-mail
Written by ஐரேனிபுரம் பால்ராசய்யா   
Wednesday, 20 June 2012 10:38

கவிஞர் அ ஜனசிந்தன்

இலக்கிய வயல்களில் நல்ல தரமான கவிதைகள் வடிப்பது இவருக்கு கை வந்த கலை என்று தான் சொல்லவேண்டும். படிப்பறிவை விட பட்டறிவில் தான் வீரியமிக்க பல கவிதைகள் இவரது சிந்தனை வயல்களில் விளைந்து கிடக்கின்றன. தனது கற்பனை வளத்தால் பகுத்தறிவு, பொதுவுடைமை, சமுதாய அக்கறை, சமுதாய கோபம், பெண்விடுதலை, தன்னம்பிக்கை போன்ற சிந்தனைகளையும், விழிப்புணர்வு கவிதைகளையும் கட்டுரைகளையும் அறுவடை செய்திருக்கும் கவிஞர் அ ஜனசிந்தன் பெயருக்கேற்றார்போல ஒரு சிந்தனை சிற்பிதான்.

ஒவ்வொரு கவிதைகளிலும் காணப்படுகின்ற தமிழ்பற்று படிப்பவரை பரவசப்படுத்துகிறது, தமிழை நேசிப்பதுபோல இயற்கையை நேசிக்கும் இந்த கவிஞர் ஆறுகளைப்பற்றியும், பூமித்தாயைப்பற்றியும், எழுதி குவித்திருக்கும் கவிதைகளை படிக்கும்போது இவர் கரம் பிடித்து கைகுலுக்கி பாராட்டாமல் இருக்க முடிவதில்லை.

இன்றோ நதிகள் நாற்றமடிக்கின்றன

மணல் எனும் தன் மேலாடை இழந்து

அம்மணமானகாட்சி

பாட்டுக்கொரு புலவன் பாரதிக்கு இருந்தது போல சமுதாய கோபம் இவருக்கும் நிறையவே இருந்திருக்கிறது, மனித சிந்தனைகளை முடக்கிப்போடும் செயல்கள் கண்டு கொதித்தெழுகிறார் இந்த கவிஞர் அ. ஜனசிந்தன்.

இவரது கவிதைகளில் நிறைய காணக்கிடைப்பது தன்னம்பிக்கை வளர்க்கும் தரமான கவிதைகள். மாதம்தோறும் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் அமைத்து அதில் தன்னம்பிக்கை கவிதைகள் வாசித்து இளைய கவிஞர்களுக்கு வழிகாட்டியாய் இருந்துவருகிறார். அதுபோல மதுரை கலை இலக்கிய பெருமன்ற கூட்டத்திலும் மாதம்தோறும் கவிதைகள் வாசித்து பலரது புருவங்களை உயர வைத்திருக்கிறார்.

தமிழ்மொழி மீதான பற்றும் தழிழ் தன் வேர்களை ஆழப்படுத்தவும், தமிழ் தனது நிறத்தை இழக்காமல் இருக்கவும் இவரது தமிழ் ஆர்வ கவிதைகள் உதவியிருக்கின்றன என்றால் அது மிகையாகாது. கண்தானம் பற்றிய இவரது கவிதைகள் சிறப்பு கவன ஈர்ப்பை பெற்றிருக்கின்றன, சிவகாசியில் லயன்ஸ் கிளப்பின் கண் தான கமிட்டியை கர்ண தேவர்களே என்றும்

விழி இழந்தோர் ஒளி பெற

காலம் பிரசவித்த கண்ணப்பர்கள்

என்று பாராட்டி கவிதை எழுதிய

இவரை பாராட்டியவர்கள் பலருண்டு..

பூமியைக்காப்பாற்றுங்கள் என்ற இவரது கவிதையை படிக்கின்றபோது கண்களின் ஓரம் கண்ணீர் கசியும். உனது ரத்தக்கடல்களில் மாகுண்டுகள் வைக்கிறோம்

தாக்கும்போது உனது முனகல் சப்தம் கேட்டது.

மிக அற்புதமான வரிகளால் நெய்யப்பட்டிருக்கிறது இந்த கவிதை.

தனது முதல் பிரசவ கவிதை பிறந்த கதையை சொல்லக்கேட்டபோது விழிகள் அகலமாகிக்கொண்டன. பத்து நிமிடத்தில் கவிதை எழுத சொல்லி ஐந்து தலைப்புகள் தந்தவுடன் செருப்பு என்ற தலைப்பில் இவர் எழுதிய

பூமாலை வாங்குபவர்

புனிதராக இல்லாவிட்டால்

செருப்பு மாலையும் விழும்

என்ற கவிதை பின்பு தேசியவலிமை இதழில் வெளிவந்ததைப்பார்த்து பரவசமானேன் என்றார்  கவிஞர் அ. ஜனசிந்தன். எதிர்காலத்தில் ஒரு சிறந்த கவிஞராக வர பிள்ளையார் சுழி போட்ட கவிதை அது என்று சிலாகித்து சொல்லும் அவரை விழி உயர்த்தி பார்க்கத்தோன்றியது.

மனித நேய பண்பு இவரிடம் மலிந்து கிடக்கிறது சாலையோரம் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஒரு பெண்மணியையும் அவள் குழந்தையையும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று உயிரை காப்பாற்றி இருக்கிறார், இவரது மனித நேய பண்பை பாராட்டி தேசிய வலிமை மாத இதழ் இவரைப்பற்றி கட்டுரையாக வெளியிட்டு பெருமை சேர்த்துக்கொண்டது.

வாழ்வியல் மதிப்பீடுகளில் மாற்றம் விளைவிக்கும் சீரிய கவிதைகள் இவரது கவிதைகள். வாழ்க்கையை சிகரத்தில் ஏற்றிவிடும் இவரது சிந்தனைக்கவிதைகள் மற்றும் சிந்தனைக்கட்டுரைகள் தேசியவலிமை, மனிதநேயம், செம்மலர், முதற்சங்கு, அக்னிபுத்ரா, போன்ற இதழ்களில் வெளிவந்திருக்கின்றன,

2009-ல் பொறிகள் எனும் கவிதைத்தொகுப்பு நூல் வெளிவந்திருக்கிறது, இந்நூலில்

வெள்ளையர் சிறையிலிருந்து விடுதலையாகி இப்போது

கொள்ளையர் வீட்டில் குடியிருக்கிறோம் என்ற அற்புதமான வரிகளை மறைந்த சிந்தனையாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் பாராட்டி கடிதம் அனுப்பியிருக்கிறார்.

2011-ல் தினமும் புத்தகங்களோடு பேசுவோம் என்ற நூல் (மணிமேகலை பிரசுரம்) வெளிவந்திருக்கிறது. இந்நூலில் காணக்கிடப்பவை எல்லாம் சிந்தனையைத்தூண்டும் கவிதைகள். வாழ்க்கையின் எல்லா தேடல்களையும் அனுபவ நிதர்சனங்களோடும் தன்னம்பிக்கை தளிர்களோடும் வாழ்வியல் சம்பவங்களோடும் சவால்களோடும் சிந்தனைக்கு விருந்து படைத்து மனச்சோர்வுகளுக்கு விலக்கமளித்து வாசகனை நிமிர வைக்கும் நிஜமான கவிதைகள் இந்நூலில் வியாபித்து கிடக்கின்றன.

இது தவிர மகாத்மா தேடும் மனிதர்கள் எனும் கட்டுரை நூலும், பூமியை புரட்டிய ரயில் எனும் வரலாற்று நூலும் அச்சில் உள்ளன. இன்னும் சில மாதங்களில் வெளிவர தயாராக உள்ளது.

வாரியார் அறக்கட்டளை சார்பில் வாரியார் சுவாமிகளின் வாய்மை கவிதைக்கு சிறந்த கவிஞர் எனும் பட்டம் பெற்றிருக்கிறார். இது தவிர 2009-ல் தமிழகக் கவிஞர் கலைமன்றம் சார்பில் கவிவேந்தர் பட்டமும் பெற்றிருக்கிறார்.

மத்திய அரசு பணியில் ரயில் எஞ்சின் உதவி ஓட்டுநராக பணி செய்து பணி ஓய்வு பெற்றிருக்கும் இந்த கவிஞர் மேலும் பல படைப்புகள் படைத்து அவை நூலாக வெளிவர முதற்சங்கு மனதார வாழ்த்துகிறது.

முகவரி: கவிஞர் அ. ஜனசிந்தன், 79, சொக்கநாதபுரம், விளாங்குடி, மதுரை-18 கைபேசி:9362881290

Last Updated on Wednesday, 20 June 2012 10:41