Home Literature எழுத்தாளர் அறிமுகம்-2
எழுத்தாளர் அறிமுகம்-2 PDF Print E-mail
Written by ஐரேனிபுரம் பால்ராசய்யா   
Wednesday, 20 June 2012 10:34

 

கமல.செல்வராஜ்

 

காட்டுச்செடிகளுக்கு எவர் தயவும் தேவையில்லை தானாய் வளர்ந்து பூ பூத்து நறுமணங்களை வாரி வழங்கிவிடும், அதுபோலவே எழுத்தாளர் கமல.செல்வராஜ் அவர்களும், எவர் தயவுமின்றி எழுத்துலகில் தனி முத்திரை பதித்து நிற்கிறார்.

எதிர்படும் முகங்கள், கடந்து செல்லும் மனிதர்கள் எல்லோருக்கும் புன்னகை தந்தனுப்பும் புன்னகைக்கு சொந்தக்காரர் திரு கமல.செல்வராஜ்.

தனது நடை, தனது பார்வை என்ற சமூக கோணத்தில் இவர் பதிவு செய்து வைத்திருக்கும் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், பலரது பார்வைகளில் விழுந்து எழும்போதெல்லாம் நல்ல பதிவுகள் என்ற நற்சான்றிதழ் கிடைத்து விடுகின்றன.

கவிதைகளில் எரிமலையின் வெப்பம் மேலோங்கி நிற்கும் தன்மையும், வாழ்வின் துயரங்களை படம் பிடித்துக்காட்டும் வல்லமையும் இவரது கவிதைகளில் விஞ்சி நிற்கும், இவரது கவிதைகளில் விளைந்து கிடக்கும் கருத்துச் செறிவுகள் காலத்தால் அழியாத வரிகளாக, சமுதாய சீர்கேடுகளை தட்டிக்கேட்கும் விழிப்புணர்வு கவிதைகளாக மலர்ந்து மணம் பரப்பி நிற்கின்றன,

சமுதாய வாசனை தட்வி நிற்கும் இவர் கவிதைகளை ஒருங்கிணைத்து கூந்தலை தட்டி முடி எனும் கவிதைத்தொகுப்பு நூல் வெளியிட்டிருக்கிறார். வாழ்க்கையின் குறுக்கு வெட்டு தோற்றங்களை இவரது கவிதைகளில் காணலாம்.

தன் மன அதிர்வுகளை உணர்த்த துடிக்கும் வீணைக்கவிஞர், பொய்யில்லாத, பாவனையில்லாத, திரையில்லாத, முகமூடியில்லாத வெள்ளைக்கவிஞர் இவர் என்று சாகித்திய விருது பெற்ற நாவலாசிரியர் பொன்னீலன் இவரை பாராட்டுகிறார்.

நீ

பிள்ளையாய் இருந்தபோது

தந்தைக்கு அடிமையாம்

இல்லறம் புகுந்தபின்

தலைவனுக்கு அடிமையாம்

வயோதிகம் அடைந்தபின்னே

மகனுக்கு அடிமையாம்

என்னும் மனுதர்ம அடிமைத்தன கோட்பாட்டைக் கேள்விக்குறியாக்குகிறது இவரது கவிதை. இவரது கவிதைகள் தினமலர் நாளிதழ், தினமலர்-வாரமலர், சமுதாய நண்பன், சிறுமலர், முதற்சங்கு போன்ற இதழ்களில் வெளிவந்திருக்கின்றன.

விருட்ச மரங்களின் வேர்கள் ஆழ அகலம் தேடிப்போவதைப்போல இவரது சிறுகதைகள் நீண்டு அகலம் சென்று வாசகனை வசமடைய வைத்து அவன் விழிகளை வரிகளிலிருந்து அப்புறப்படுத்தாமல் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்திக்கொள்ளும் வல்லமை இவரது சிறுகதைகளுக்கு உண்டு.

தங்களது இயல்பான சுபாவங்களை மாற்றிக்கொண்டு வாழும் மனிதர்களின் முகமறிந்து கதை புனைவதில் இவர் அதிகம் கவனம் பெறுகிறார். இவர் எழுதிய கதைகள் முற்றம், கல்லூரி ஆண்டுமலர் போன்ற இதழ்களில் வெளிவந்திருக்கிறது.

சமுதாயத்தின் பல்வேறு அசைவுகளை காட்டும் பல கட்டுரைகள் இவர் எழுதியிருக்கிறார். அவை அச்சத்தை விதைக்காமல் துணிச்சலையும் தன்னம்பிக்கையையும் விதைத்து விடுகிறது. இதனால் பலன் அடைந்தவர்களின் பாராட்டு மழையில் தினம் நனைபவர்.

இவரது கட்டுரைகள் தினமலர் வாரமலர், சமுதாய நண்பன், குமரிக்கடல், முதற்சங்கு போன்ற இதழ்களில் வெளியாகி இருக்கின்றன.

பத்திரிகை துறையில் பரவலான ஈடுபாடு கொண்டவர். எழுத்தின் மீது அவருக்கிருக்கும் ஆர்வம் அலாதியானது. ஆரம்பத்தில் தினமலர் நாளிதழின் நிருபராக பதினான்கு ஆண்டுகள் பணியாற்றிக்கொண்டே பல படைப்புகளையும் தினமலரில் எழுதியிருக்கிறார்.

குமரி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் துவங்கி அதன் தலைவராக இருந்து பலரின் வாழ்வியல் ஆழங்களை அறிந்து கொண்டவர்.

படந்தாலுமூடு கிரேஸ் கல்வி நிறுவனத்தில் முதல்வராக பணியாற்றிக்கொண்டே எழுத்தை நேசிப்பவர். இவர் ஒரு சமூக சேவகரும் கூட, சிதறால் சித்ராலயா சேவா டிரஸ்ட் புரவலராக இருந்து கொண்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிறைய சேவைகள் செய்து வருகிறார்.

குமரிமாவட்ட போதை தடுப்பு இயக்க துணைத்தலைவராகவும், அருமனை பொது நூலகத்தின் வாசகர் வட்டத்தலைவர் மற்றும் புரவலராகவும்,மார்த்தாண்டம் இலக்கிய பேரவையின் உறுப்பினராகவும் இருந்து இலக்கிய பணியும் சமுதாயப்பணியும் இணைத்து செயல்படுபவர்.

இவர் எழுத்தாளர் மட்டுமல்ல ஒரு சிறந்த பேச்சாளரும்கூட, இவர் மேடைகளில் பேச தொடாங்கினால் தடையில்லா நீரோட்டம் போல வார்த்தைகள் இலக்கியம் கலந்து வந்து விழும். பட்டி மன்றங்கள், வழக்காடு மன்றங்கள், சுழலும் சொல்லரங்கம், கவியரங்கம் போன்ற நிகழ்ச்சிகளில் இவரது இலக்கிய பேச்சு பலரது இதயங்களில் இடம் பெற்று விடும்.

இது தவிர பல்வேறு வானொலி நிகழ்சியிலும் கலந்துகொண்டு மிகச் சிறப்பான நிகழ்ச்சிகளை நிகழ்த்தி பலரது பாராட்டுக்களையும் பெற்ற சிறந்த மக்கள் கலைஞர் திரு கமல.செல்வராஜ். இவரது இலக்கிய ஆர்வத்தைப் பாராட்டி குமரிமாவட்ட கவிதை உறவு அமைப்பு இவருக்கு ஆய்வுச்சுடர் விருது அளித்துள்ளது.

இவரது படைப்புகள் மீது ஆய்வு செய்திருப்பவர்களின் எண்ணிக்கை ஐந்துக்கும் மேலாக இருக்க்கிறது. ஆய்வாளர் எ. ஜான்சிராணி குமரிமாவட்ட எழுத்தாளர் கமல.செல்வராஜ் எனும் தலைப்பில் ஆய்வு செய்திருக்கிறார். ஜே.சிங் என்பவர் கமல.செல்வராஜ் கவிதைகள் ஓர் ஆய்வு எனும் தலைப்பில் ஆய்வு செய்திருக்கிறார்.

பொ.செந்தில்குமார் அவர்கள் கமல.செல்வராஜ் கவிதைகள் ஓர் ஆய்வு எனும் ஆய்வையும், டா.நான்சி மாணவி கமல.செல்வராஜின் கட்டுரைகளில் சமுதாயப் பார்வை எனும் ஆய்வையும், கமல.செல்வராஜின் கூந்தலை தட்டி முடி – குமரி ஆதவனின் எரிதழல் கொண்டுவா கவிதை நூல் ஒப்பீடு செய்து திரு என்பவர் ஆய்வு செய்திருக்கிறார்.

வரதட்சணை இல்லையேல் வாழ்க்கையில்லை எனும் வாதங்கள் ,மலிந்து கிடக்கும் குமரி மண்ணில் மணி முத்தாய் அவதரித்திருப்பவர் திரு கமல.செல்வராஜ் அவர்கள் எம்.ஏ, எம்.ஃபில், எம்.எட், டி.ஜே என பல பட்டங்கள் பெற்றிருக்கும் இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து மினி என்ற மங்கையை வரதட்சணை எதுவுமின்றி தன்னுடைய வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டவர்.

எல்லோரும் ரத்த தானம் கண் தானம் செய்யும்போது இவர் தனது உடலையே தானம் செய்து வைத்திருப்பது மற்றுமொரு வியப்பான செய்தி.

வருங்காலத்தில் இவர் இன்னும் பல படைப்புகள் தந்து அவைகளெல்லாம் நூலாகி நிறைய ஆய்வுகள் வெளியாகி இலக்கிய உலகம் இவரை உயர்ந்த இடத்தில் வைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.                 முகவரி: கமல. செல்வராஜ், சித்ராலயம், அருமனை-629 151 கைபேசி: 9443559841

Last Updated on Wednesday, 20 June 2012 10:38