Home General வானியலின் வரலாறு - 1
வானியலின் வரலாறு - 1 PDF Print E-mail
Written by வினோத் குமார்   
Sunday, 17 June 2012 16:57

உங்களின் சொந்த ஊர் எது? சென்னை? மதுரை? தூத்துக்குடி? ஆண்டிப்பட்டி? இதில் எதுவும் இல்லாமல் வேறொன்றா? கவலையில்லை. எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், கேள்வி இப்போது அதுவல்ல. உங்கள் ஊரைத் தாண்டி நீங்கள் சென்றால் என்ன இருக்கும்? இதென்ன இப்படி ஒரு கேள்வி! என்றா கேட்கிறீர்கள். இருக்கட்டும் சொல்லுங்கள். உங்கள் ஊரைத் தாண்டிச் சென்றால் என்ன இருக்கும்? ஆண்டிப்பட்டியைத் தாண்டிச் சென்றால் ஒருவேளை பெரிய ஆலமரமும், ஐயனார் கோவிலும் இருக்கலாம். சென்னையின் ஒருப்பக்கம் கடல். சரி, கடலைத் தாண்டிப் போனால்!

 

நீங்கள் எங்கு, எந்த ஊரில் இருந்தாலும் உங்கள் ஊரைத் தாண்டிச் சென்றால் இன்னொரு ஊர் இருக்கும் அல்லவா! பொறுமை. பொறுமை. என்னை அடிக்க வராதீர்கள். இதெல்லம் ஒரு கேள்வியா? என்று தானே கேட்கிறீர்கள். நான் கேட்பதற்கும் அர்த்தம் உண்டு. நான் கேட்ட கேள்வி உங்களுக்கு கேள்வியாகவேத் தோன்றாமல், உங்களை கேலி செய்வதாகத் தோன்றலாம். ஆனால், நான் கேட்ட கேள்வியை நீங்கள் வேறு யாரிடமாவது கேட்டிருந்தால் உங்களுக்குக் கிடைத்திருக்கும் பதில், அவர்கள் ஊரைத்தாண்டி எதுவும் இல்லை! என்பது தான். உங்கள் ஊர். அதன் பிறகு பெரியப் பள்ளம். இவ்வாறு தான் உங்களுக்கு பதில் கிடைத்திருக்கும். ஒருவேளை உங்கள் ஊர், அதன் பின் அடுத்த ஊர். அவ்வளவு தான். அதன் பிறகு எதுவுமில்லை. பெரியப் பள்ளம் தான். இவ்வாறு தான் கூறியிருப்பார்கள்.

 

ஆனால் இந்த பதில் கிடைக்க நீங்கள் இப்போது பிறந்திருக்கக் கூடாது. நீங்கள் மனித சரித்திரத்தின் ஆரம்ப நாட்களில் பிறந்திருக்க வேண்டும். ஒருவேளை அப்படிப் நீங்கள் பிறந்து இந்தக் கேள்வியை கேட்டிருந்தால் நிச்சயம் நான் கூறிய பதில் தான் உங்களுக்குக் கிடைத்திருக்கும்.  உண்மையிலேயே சரித்திர காலத்தின் ஆரம்ப நாட்களில் பண்டைய மக்கள், அவர்கள் ஊரையும், அதற்கு பக்கத்து ஊரையும் தவிர எதுவுமில்லை என்றே நினைத்தனர். யாரவது அதையும் தாண்டி செல்வார்களானால் “தொபகடீர்” என்று விழுந்து விடுவார்கள் என்று கூறினர். பூமி என்பதே அவர்கள் ஊரும், பக்கத்து ஊரும் தான்! மேலும் இந்த பிரபஞ்சம் என்பதே இந்த பூமி மட்டும் தான். இதுதான் அவர்களின் கணிப்பு. அது சரி, பூமி என்பதே இந்த இரண்டு ஊர்கள் தான் என்றால் பூமியின் வடிவம்? தட்டைத் தான். வேறென்ன! இரண்டு  ஊர் மட்டுமே இருக்கும் பூமி வேறு எப்படி இருக்கும். ஆனால் மனிதன் அதோடு நிற்கவில்லை. காலம் தன் கையில் எல்லவற்றிற்கும் பதிலை வைத்திருந்தது.

 

மனித சரித்திரத்தில் நாகரீகம் பிறக்க ஆரம்பித்தது. மனிதன் கண்டுப்பிடித்த கண்டுப்பிடிப்பிலேயே சிறந்த ”சக்கரம்” கண்டுப்பிடிக்கப்பட்ட பிறகு அந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. ஒருவேளை அவன் ஊருக்குப் பிறகு வேறு ஊர், அதன் பிறகு வேறு ஊர் என ஒரு நாலைந்து ஊர்கள் இருக்கும் என்று எண்ணனார்கள். ஆனால், பூமி அவ்வளவு தான். அது தட்டையானது. சில ஊருக்குப் பிறகு பெரியப் பள்ளம், இக்கருத்தில் எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை. ஆனால் பண்டைய மனித சரித்திரத்தில் உயரிய நாகரீகத்தைக் கொண்ட கிரேக்கர்கள் ஒன்றும் சும்மா இருக்கவில்லை. பெரிய, பெரிய தத்துவஞானிகளைக் கொண்ட நாடு அது. அவர்களின் வித்தியாசச் சிந்தனையும், ஜியோமெட்ரி மீதான அவர்களின் ஆவலும், மோகமும் “தட்டை உலக” சித்தாந்தத்தை தவறு என உணர்த்தியது.

 

 

கி.மு. 500-ல் வாழ்ந்த ”ஹெக்காடியஸ்” என்ற கிரேக்க அறிஞர் பூமி ஒரு மாதிரி “வட்டம்” என்றார். “தட்டை உலகத்திற்கு” ஒப்பிட்டால் “வட்ட உலகம்” எவ்வலவோ பரவாயில்லை தான். ஆனாலும் அது போதாதே. உண்மை இன்னும் தொலைவில் உள்ளதே. அதெல்லாம் சரி. பூமி ”தட்டை” அல்லது “வட்டம்” என்றே வைத்துக் கொள்வோம்.  ஆனால் பூமி எதன் மேல் உள்ளது? என்ற கேள்வியை எழுப்பினால், மிகவும் யோசித்து விட்டு “நாலு கம்பத்தின் மேல் பூமி நிற்கிறது” என்றனர். அந்த நாலு கம்பங்கள் எதன் மேல் நிற்கிறது என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் விழித்தனர். ஒருசிலர் நமது பூமி ஒரு பெரிய ஆமை மீது உள்ளது என்றனர். சிலர் ஆமை மீது நான்கு யானையும் அந்த யானைகள் மீது நமது தட்டை பூமியும் உள்ளது என்றனர்.

 

 

ஆனால் அதோடு அவர்கள் நிற்கவில்லை. காலம் அதன் ரகசியங்களை மெல்ல அவிழ்க்க ஆரம்பித்ததும் அவர்களுக்கு உண்மை பிடிப்பட்டது.    கி.மு. 550-ல் வந்த “அனாக்ஸ்மாண்டர்” என்ற அறிஞர், “இல்லை, இல்லை, பூமி ஒரு மாதிரி சிலிண்டர்” என்றார். ஆனால் அதுவும் சரிப்பட்டு வரவில்லை. காலம் கடைசியில் கனிந்தது. உண்மையை அதன் பிறகு இரண்டு கிரேக்கர்கள் தனித்தியாக கண்டறிந்தனர்.

 

(இன்னும் கண்டுப்பிடிப்போம்)

Last Updated on Wednesday, 20 June 2012 05:25